தின்பண்டம் திருடியதாக 10 வயது மகளை எரித்துக் கொன்ற தந்தை

 
fire

நெல்லை மாவட்டம் பணகுடியில் தின்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வளர்ப்பு தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேசு அந்தோணிராஜ்

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் சுஜா. இவருக்கு கடந்த எட்டு வருடம் முன்பு குருநாதன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். குருநாதன் தூக்கு மாட்டி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுஜா, காயல்பட்டினம் சேர்ந்த ஜேசு அந்தோணிராஜ்  என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நேற்று முன்தினம் சுஜாவின் குழந்தைகளான மாதேஷ், மகராசி, மகேஸ்வரி ஆகிய மூன்று பேரும் தின்பண்டம் வாங்க காவல்கிணறு பேக்கரி சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் கடையில் தின்பண்டம் வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பேக்கரியின் உரிமையாளர் ஜேசு அந்தோணி ராஜிடம், குழந்தைகள் திருடிவிட்டதாக புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசு அந்தோணி ராஜ் வீட்டிற்கு சென்று குழந்தைகள் 3 பேரையும் திட்டியுள்ளார்.  பின்னர் 3 பேர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ தீவைத்துள்ளார். மாதேஷ், மகராசி இரண்டுபேரும் தப்பித்து ஓடிவிட்டனர். மகேஸ்வரி மட்டும் உடலில் 90 சதவீத தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மகேஷ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகேஷ்வரியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, மகேஸ்வரியின் தாய் மாமா சண்முகராஜனிடம் வழங்கப்பட்டது, பின்னர் அவர் மகேஷ்வரி உடலை நாகர்கோவில் மின் மயானத்தில் தகனம் செய்தார். குழந்தைக்கு தீ வைத்த வளர்ப்பு தந்தை ஜேசுஅந்தோணிராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.