எழுத்துப்பிழை, தவறுகளுடன் வெளியிடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விளக்க வீடியோ

 
s

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் தவறுகளுடன் வெளியிடப்பட்ட ஏ.ஐ. வீடியோவில் சர்ச்சை எழுந்துள்ளது. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவில் தமிழ்நாடு அரசின் இலச்சினை தவறுதலாக இருந்துள்ளது. திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதற்கு முன் முன்னோட்டமாக ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், “இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன. பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா? பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.