ஈரோட்டு இடைத்தேர்தல்- ஈவிகேஎஸ் இளைய மகன் போட்டியிட வாய்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 -தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திருமகன் ஈ வெரா படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் இரண்டாவது முறையாக நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் எனவும், ஈவிகேஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.