குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்கவும் - இபிஎஸ் கோரிக்கை..

 
edappadi palanisamy


போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த  ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, பில் கலெக்டர் 66 உள்பட மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து கடந்த வாரம் புதிதாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்நிலையில் குரூப் 4 காலிப்பணியிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய் என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட   திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 

tnpsc3

"தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்" என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும்  திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு   திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.