பேருந்தில் பாய்ந்த மின்சாரம்! தன் உயிரை கொடுத்து மொத்த உயிரையும் காத்த பெண்
ராணிப்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய போது தாழ்வான மின்கம்பி மீது பேருந்து உரசியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அனிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பேருந்தின் மூலம் வந்துகொண்டிருந்தனர். அப்பேது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதி அருகே டீ அருந்துவதற்காக பேருந்து சாலையோரம் நிறுத்தும் போது சாலையோரம் உள்ள மின் கம்பி பேருந்தின் மேல் கூறை மீது உரசியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் பேருந்தில் இருந்து கீழே இறங்குவதற்காக கம்பியை பிடித்த அகல்யா(20) என்ற இளம் பெண் இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழப்புக்கு முன் கம்பியில் கைவைக்காதீங்க... என கத்திக்கொண்டே அகல்யா கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து அகல்யாவின் உடல் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் பயணம் செய்த போது மின்சாரம் தாக்கி பக்தர் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது