சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு- கைகட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்: எடப்பாடி பழனிசாமி

 
eps

தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

eps

இதுதொடர்பாக  எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் நடமாட்டம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறி தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபற்றி ஏற்கெனவே பலமுறை பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக எனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளேன். அதோடு சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி, அதிமுக வட்டச் செயலாளர் என். ராஜா (எ) ஜூனியர் ராஜா என்பவர் சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றைக் கண்டித்து நேற்று (08.10.2024) நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் அவரது வட்டத்திலிருந்து திரளான பொதுமக்களை அழைத்துச் சென்று பங்கேற்றுள்ளார். அதன் பின்னர் அன்று மாலை சுமார் 05.30 மணியளவில் ராஜா, தனது இருசக்கர வாகனத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பி.கே. புதூர், இந்திராநகர், ரேஷன் கடை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜாவின் வாகனத்தை மறித்து சர்வசாதாரணமாக, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். ராஜாவின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil Nadu CM Stalin, Opposition leader EPS trade barbs over waterlogging  in Chennai | Chennai News - The Indian Express

குனியமுத்தூர் பகுதியானது தனியார் கல்லூரிகள் அதிகமுள்ள பகுதியாகும், கல்லூரிக்கு அருகிலும், மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவும், அரசியல் காரணமாகவும் ராஜாவுக்கு எதிராகத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.  இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், அதிமுக வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயலாளர் போகர் சி. ரவி  நேற்று 08.10.2024) நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது, பேரூராட்சியின் அவலங்களை எடுத்துரைத்துள்ளார். இதன் காரணமாக இன்று (09.10.2024), பேரூராட்சி செயல் அலுவலரை வேலை நிமித்தமாகப் பார்க்கச் சென்ற ரவியை, திமுக-வைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் சிலர் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த ரவி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இத்தாக்குதல் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பள்ளிகள் அருகே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக வரும் செய்திகளை, நான் பலமுறை அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவும், சட்டப் பேரவையில் எடுத்துரைத்தும், முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.


இதனால் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசில் தொடர்ந்து  அதிமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறி தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இந்த ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. தாக்குதலுக்குள்ளான அதிமுக நிர்வாகிகள் அளித்த புகாரினை பதிவு செய்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் காவல் துறையை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.