கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 2வது நாளாக தொடரும் ED ரெய்டு

 
ச்

வேலூர் காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  2வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.

2019- நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிட்ட நிலையில். இவர்கள் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 11 கோடியே 52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று காலை முதல் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதில் எஸ்பிஐ வங்கியின் இரண்டு ஊழியர்கள் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு கல்லூரிக்கு வந்து இரவு சுமார் பத்து மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினரோடு  திரும்பி சென்றனர். கல்லூரியில் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்த போதும் கல்லூரியில் நள்ளிரவு 2.00 மணியை கடந்து தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மற்ற இடங்களில் நடந்த சோதனை நள்ளிரவே முடிவுக்கு வந்த நிலையில் அனைத்து அதிகாரிகளும் தற்போது கிங்ஸ்டன் கல்லூரியில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.