ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்றால் கேடு- எச்சரிக்கும் துரை வைகோ

ஆளுநர் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்றால் அவர் கட்சிக்கு கேடு ஏற்படும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, “வக்பு சட்ட திருத்தம் தேவையற்றது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை, விவசாயம், 10 ஆண்டுகளாக பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, என எவ்வளவோ பிரச்சனைகள் உள்ள நிலையில் அவற்றை திசை திருப்ப பாஜக அரசு மதம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது, வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை. திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள்- இந்துக்கள் ஒற்றுமையுடன் வழிபாடு நடத்தி வந்த நிலையில், எம்பி நவாஸ்கனி மாமிச விருந்து சாப்பிட்டதாக தவறான தகவலை வெளியிட்டு அதன் மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்தி இந்து இஸ்லாமியரிடையே காழ்ப்புணர்ச்சி உருவாக்க மதவாத சக்திகள் ஈடுபட்டு வருகிறது. மக்கள் நல திட்டங்கள் சார்ந்து வாக்குவாதம் செய்யலாம், ஆனால் மதம் ஜாதி வைத்து அரசியல் செய்யும் இயக்கங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்திற்கு விஜய் பங்கேற்பதும் பங்கேற்காததும் அவரது முடிவு. ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிப்பதுதான் நல்லது. அதில் பங்கேற்றால் அவரது கட்சிக்குத்தான் கேடு ஏற்படும்” என்றார்.