துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை! ஊருக்கு வந்த நேரத்தில் வெட்டி சாய்த்த கும்பல்

 
ச் ச்

தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் அருகே உள்ள ஆலடியூரில் துபாய் தொழில் அதிபரான தங்கராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆலடியூரை சேர்ந்தவர் தங்கராஜ்  (வயது 78). இவர்  துபாயில் நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் சொந்த ஊரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது சம்மந்தமாக ஆலடியூருக்கு வந்துள்ளார். இன்று  இரவு தங்கராஜ் ஆலடியூர் மெயின் ரோட்டில் நின்ற போது மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து வந்த ஏரல் போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், துபாயில் உள்ள தங்கராஜ் கடையில்  மூக்காண்டி என்பவரது மகன் வேலை பார்த்து வந்ததாகவும், கொரோனா காலத்தில் அவர் துபாயிலேயே இறந்து போனதால் மூக்காண்டி மகன்  உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாத நிலையில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தனது மகனின் மரணத்தில் சந்தேகத்தில் இருந்த மூக்காண்டி, தங்கராஜ் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூக்காண்டி மற்றொருவருடன் சேர்ந்து தங்கராஜை கொலை செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து  தப்பி ஓடிய மூக்காண்டி மற்றும் அவருடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் ஏரல் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.