விஷ ஊசிப் போட்டு மருத்துவர் தற்கொலை

 
doctor

சென்னையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் நட்சத்திர விடுதி அறையில் விஷ ஊசிப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில், பொது அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்த 34 வயதானவர்  மகேஸ்வரன். நேற்று மாலை முதல் சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று காலை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வராத மகேஸ்வரனை தொடர்பு கொண்ட சக மருத்துவர்கள்,  வெகுநேரம் ஆகியும் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மகேஸ்வரன் தங்கியிருந்த ஹோட்டலை  தொடர்புகொண்ட மருத்துவர்கள், மகேஸ்வரன் அறையில் தங்கி இருக்கிறாரா என கேட்டுள்ளனர். 

இதையடுத்து உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்த அறையை ஊழியர்கள் மாற்று சாவி பயன்படுத்தி, திறந்து பார்த்த போது மகேஸ்வரன் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். உடனடியாக ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரனை மருத்துவனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடைய ராயப்பேட்டை போலீசார் மகேஸ்வரன் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் படுக்கைக்கு அருகில் ஊசியுடன் இருந்த சிரஞ் ஒன்றை கைப்பற்றினர். தொடர் விசாரணையில் மகேஸ்வரன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், விடுதி அறையில் தற்கொலை கடிதம் ஒன்றையும் கைப்பற்றி இருப்பதாக கூறும் போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல என எழுதி வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். 

மகேஸ்வரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து மகேஸ்வரன் தனியாக வசித்து வருவதாகவும், அவரது மனைவி கடலூரில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த மகேஸ்வரன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், வேறு ஏதும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா எனவும் அவரது நண்பர்கள், சக மருத்துவர்களிடமும் ராயப்பட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்