பாஜக திருந்தாவிடில் அவர்களுக்கு கேடுகாலம்தான் - ஆர்.எஸ்.பாரதி
பா.ஜ.க இனிமேலாவது திருந்தனும், இல்லையென்றால் அவர்களுக்கு கேடுகாலம் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாடு மக்களுக்காக பல கோரிக்கைக்களுடன் முதலமைச்சர் டெல்லி செல்ல உள்ள நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்துள்ளது. சென்டிமென்ட் ஆக டெல்லி பயணமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வருகின்றது. செந்தில் பாலாஜி 15 மாதம் சிறையில் உள்ளார். இது தேவை இல்லாத ஒன்று என்பதை நீதிமன்றம் சொல்லியுள்ளது. திமுகவிற்காக செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார்.
கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அவரை கைது செய்து உள்ளே வைத்திருந்தனர். திமுக செல்வாக்கை யாரும் குறைக்க முடியாது என்பதற்கு சான்றாக 40/40 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அவர் அமைச்சர் ஆவதற்கு எந்தவிதமான தடையும் உத்தரவில் இல்லை. அமலாக்கத்துறை வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த வழக்கை இழுத்தடித்து தாமதமாக்கினர். அதற்கு நீதிமன்றம் சரியான பதில் கொடுத்துள்ளது. பாஜக இனிமேலாவது திருந்தனும். அரசியல்வாதிகள் மீது போடப்படும் அனைத்து வழக்குகளில் உச்சநீதிமன்றம் கொட்டுக்கொடுத்து ஜாமீன் கொடுத்துவிட்டது. இனியாவது திருந்தனும் இல்லாவிட்டால் கேடு காலம் தான். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார். இதற்கான பதிலை நேற்றே முதல்வர் சொல்லிவிட்டார்” என தெரிவித்தார்.