ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தமிழக சட்டப்பேரவை மரபு படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதுமே மரபு என தமிழக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. மேலும் ஆளுநரின் இந்த செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க ஆர்ப்பாட்ட நடத்தியது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக அல்லாத மாநிலங்களில் தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சி என திமுக குற்றம் சாட்டியுள்ளது. மாநில அரசை மதிக்காத ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தினர். மாநில உரிமையை சிதைத்து, சுயாட்சியை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாக விமர்சனம் செய்தனர்.