பெயருக்கு பின்னல் சாதி பெயர்களை போடாதீர்கள்- கனிமொழி எம்.பி.
பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்து, இனி பத்திரிக்கை அடிக்க வேண்டாம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் கட்டிட திறப்பு விழா, காமராஜர் சிலை திறப்பு விழா, தங்கும் விடுதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் கட்டிடத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி, “தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள், நாம் எல்லோரும் உழைப்பை நம்ப கூடியவர்கள். அதனால் நாடார் சங்க கட்டிட திறப்பு விழா அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருப்பது போன்று சாதி பெயரைப் போட வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தார்.