சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசமா? ஜெயக்குமாருக்கு கனிமொழி பதில்
மணிப்பூரில் நடைபெற்று வரக்கூடிய கலவரம் உலக அரங்கில் நாம் நாணி தலைகுனியும் அளவிற்கு உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்று வரும் கலைஞர் வினாடி வினா போட்டி திமுகவின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக முக்கியமாக இந்த நாட்டில் பேசப்படக்கூடிய முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சிகளை கடமை. நாடாளுமன்றத்தில் திமுக சார்பாக என்னென்ன பிரச்சனைகள் எழுப்பப்பட வேண்டும் என்பது குறித்து முதலமைச்சருடைய ஆலோசனையை பெற்று மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தொடர்ந்து தூத்துக்குடியை பொறுத்தவரை நீர் வடிவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய நீர்நிலைகள் ஆழப் படுத்தப்பட்டிருக்கிறது. மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தை பொறுத்தவரை உலகத்தின் முன்பாக நாம் நாணி தலைக்குனியும் அளவிற்கு உள்ளது. நாட்டின் பிரதமர் ஒருமுறை கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காதது வருந்தத்தக்கதும் கண்டிக்க தக்ககூடியது” என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுகவிற்கு வனவாசம் என்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேறு வேலை இல்லை என்பதாலும், அதிமுகவிற்கு வேறு வேலை இல்லை என்பதாலும் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல தொடங்கி விட்டார். பயத்தின் காரணமாக வரக்கூடிய கருத்தாகத் தான் நான் பார்க்கிறேன் என்று கனிமொழி தெரிவித்தார்.