முதலமைச்சர் திரும்பியதும் கட்சியில் மாற்றம்- உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை திமுக ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விஜய் மாநாட்டிற்கு திமுக என்ன எதிர்ப்பு தெரிவித்தது என்று அவரிடமே கேளுங்கள். முதலமைச்சர் வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை திமுக ஒருங்கிணைப்புக்குழு வழங்கும்.
சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இதுவரை கட்சியில் 11 சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் பணிகளை ஆய்வு செய்தது தொடர்பான விவரங்களையும் – அடுத்து திட்டமிடப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டங்கள் பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறினோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கழகத்தினை வெற்றி பெறச் செய்திட, தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் பற்றி மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்” என்றார்.