"வரும் தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்"- பொன்முடி
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, “விழுப்புரம் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி சார்ந்தவர்கள் யார் நின்றாலும் திமுகவே வெற்றி பெறும் என நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
தலைவர் யாரை நிறுத்துகிறாரோ, அவருக்காக நீங்கள் உழைக்க வேண்டும். 8 முறை தேர்தலில் நின்று 6 முறை வெற்றி பெற்றவன் நான், அந்த அனுபவத்தில் கூறுகிறேன். நிர்வாகிகள் மனக்கசப்பை தவிர்த்து வீடு வீடாக சென்று வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும். மழை பாதிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை நாடே பாராட்டுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி எதை எதையோ பேசி கொண்டிருக்கிறார்” என்றார்.
அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பொன்முடி வசம் இருந்த உயர்க்கல்வித்துறை பறிக்கப்பட்டு, வனத்துறை ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.