"இளைஞர்களுக்கு வழி விடுங்கள்; அவர்கள்தான் கட்சியின் வருங்கால பலம்"- துரைமுருகன்
இளைஞர்கள் இல்லாமல் ஒரு காலம் கட்சி வெளியே போய்விடும். எனவே இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும் என்று வேலூரில் நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது அதிக வாக்குகள் பெற்று தந்த 7 வட்ட செயலாளர்களுக்கு பரிசு வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், “எதிரிகள் கூட பாராட்டுகிற அளவிற்கு இந்த கட்சியிலே நான் இருந்ததால் தான் இன்றைக்கு அண்ணா உட்கார்ந்த இடத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன். அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும். நான் படாத அவமானமா? நான் படாத தோல்வியா? நான் சந்திக்காத எதிர்ப்புகளா? எனவேதான் சொல்லுகிறேன், இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். இளைஞர்கள் வருகிறார்கள் இன்றைக்கு நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லாம் இளைஞர்களாக வந்தோம்.
அண்ணா சொன்னார் நாற்றங்காலில் இருக்கிற பயிர் போல பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டுவிட்டால் பாழாகிவிடும். ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவர் அண்ணா. ஆகவே சொல்கிறேன் இளைஞர்கள் வரவேண்டும். இளைஞர்கள் இல்லாமல் ஒரு காலம் கட்சி வெளியே போய்விடும். ஆகவே இளைஞர்களுக்கு வழி விடுங்கள். ஆனால் வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள். வந்த உடனே என்ன கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள். உன்னை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உதைப்பட்டவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
கட்சியினால் குடும்பத்தில் கெட்ட பேர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த கட்சியிலே தியாகம் செய்திருக்கிறார்கள். ஆகவே தான் இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும். இந்த நிலையை நாம் நினைத்தால் தான் ஒரு இயக்கத்தில் நிலைத்து நிற்க முடியும். நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா? மிசாவில் எல்லோரும் நமது கட்சியை போய்விடும் என நினைத்தார்கள். நான் இருபெரும் தலைவர்களோடு மிக நெருக்கமாகவும் அண்ணாவோடும் பழகியிருக்கிறேன். ஆகவே நான் கேட்டுக் கொள்வதெல்லாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு மடம் அல்ல. அரசியல் என்பது வியாபாரம் அல்ல, அரசியல் என்பது கொள்கை பிடிப்பு கொள்கை நியாயம். இந்தக் கட்சியில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெருமைதான்” என்றார்.