தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை பெரிதுபடுத்த விரும்பவில்லை- உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறுதலாக பாடப்பட்டது குறித்த பெரிதுபடுத்த விரும்பவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தையை தெரிந்தோ, தெரியாமலோ நீக்கியுள்ளார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது, வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியுள்ளனர். யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது அரியம். ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்க நினைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்" என்றார்.
சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடதக்கது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆளுநர் மாளிகை வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.