தீபாவளி - ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் குறைப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 20 தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் அரசின் விதிகளுக்கு உட்பட்டு ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும், பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மண்டல வாரியாக அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்கச்சாவடிகளில் பணியமத்தி தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து குறைபாடுகள் உடைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் , பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு மண்டல வாரியாக எண்களும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் 1800 425 5161 என்ற எண்ணையோ அல்லது மண்டல வாரியாக இணை போக்குவரத்து மற்றும் துணை போக்குவரத்து ஆணையகரத்தையோ அணுகிடும் வகையில் பொதுமக்களுக்கான எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_176.jpg)
இந்த நிலையில் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் வழக்கமாக சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல 1700 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தீபாவளிக்கு 5,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது 3000 ரூபாய் வரைக்கும் திருநெல்வேலிக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு 4000-ஆக இருந்த கட்டணம் 2600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து கோவை , சென்னையிலிருந்து திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கட்டண குறைப்பு செய்து தனியார் செயலில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆம்னி பேருந்துகளுக்கு வெளியிடப்பட்ட கட்டண அட்டவணைப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட இருப்பதாக போக்குவரத்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


