எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது தெய்வம் தான்- திண்டுக்கல் சீனிவாசன்
எந்த விமர்சனங்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது தெய்வம் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கடுமையாக வேலை செய்யுங்கள், மக்கள் பணி ஆற்றுங்கள், பணம் இல்லை என்றால் உங்கள் சொத்துக்களை அடகு வையுங்கள், எடப்பாடி அதனை இரண்டு மடங்காக திருப்பி தருவார் என அவ்வாறு செயற்குழு கூட்டத்தில் நானே சொன்னேன், அதே தான் உங்களுக்கு சொல்கிறேன், உங்களை ஒன்றும் அவ்வாறு செய்ய சொல்லவில்லை, உழைப்பை மட்டும் கொடுங்கள், வாக்கினை சேகரியுங்கள், மற்ற அனைத்தையும் எல்லாமே தம்பி ஆர்.பி. உதயகுமார் பார்த்துக் கொள்வார்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் , அனைவரும் எங்களால் கட்சி செலவுகளை பார்க்க முடியவில்லை என்று சொன்னபோது, எல்லாம் நல்லபடியாக முடியும் நம்புங்கள் எடப்பாடியை என்று நான் அன்று சொன்னேன், முன்பு நாங்கள் எம்எல்ஏக்களாக இருந்த போது கூவத்தூரில் சசிகலா அவர்களை முதல்வராக ஆக்குவது என தீர்மானித்து, தற்காலிக முதல்வராக இருந்த ஓபிஎஸ் -யிடம் ராஜினாமா கடிதம் பெற்றுக் கொண்டு , அனைவரும் ஒப்புக்கொண்டோம் சசிகலாவை முதலமைச்சராக ஆக்குவது என்று, அவரை முதலமைச்சராக அறிவிக்க வேண்டிய வேளையில் , திடீரென சசிகலாவுக்கு தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், ஆண்டவனே வந்து எடப்பாடியை முதல்வராக ஆக்கியுள்ளார். எடப்பாடி முதல்வராக உருவாக்கியது தெய்வம் தான், எந்த விமர்சனங்கள் இருந்தாலும் எடப்பாடி முதலமைச்சர் ஆனது தெய்வகாரியம் தான்” என்றார்.