சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் திடீர் தர்ணா

 
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் தீட்சிதர் திடீர் தர்ணா போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்து வருபவர் தர்ஷன் தீட்சிதர். இவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கோயில் நிர்வாகம் குறித்து தமிழக அரசுக்கு சில புகார்களையும் அளித்துள்ளார். இதனால் இவர் மீது கோயில் தீட்சிதர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் நடராஜர் கோயிலின் தர்ஷன் தீட்சிதர் இன்று கோயிலின் உள்ளே இருக்கும் செயலாளர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலுக்குள் இன்று நடைபெற இருந்த தனது தந்தைக்கான பூஜை உரிமை மறுக்கப்பட்டதாகவும், இதுபோல் தனக்கும் பூஜை உரிமை மறுக்கப்படுவதாகவும் அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் நியாயம் வேண்டும் எனவும் கேட்டு அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தர்ஷன் தீட்சிதர், கோயில் நடை சாத்தும் நேரம் வந்ததால் போராட்டத்தை முடித்துக் கொண்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். 

இந்த திடீர் தர்ணா போராட்டம் குறித்து தர்ஷன் தீட்சிதர் கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்களை ஏற்றக்கூடாது என பொது தீட்சிதர்கள் தீர்மானம் இயற்றியபோது அதை எதிர்த்து தானும், தனது தந்தையும் குரல் கொடுத்ததாகவும், அதனால் தங்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குவதாகவும், சக தீட்சிதர்கள் மீது நானும் எனது தந்தையும் கொடுத்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தீட்சிதர்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என தொந்தரவு செய்வதாக குற்றம் சாட்டிய தர்ஷன் தீட்சிதர், அவ்வாறு செய்யாவிட்டால் கோயிலில் பணி கிடையாது எனக்கூறி இன்று எனது தந்தைக்கு ஒதுக்கப்பட இருந்த பணியை கூட நபருக்கு ஒதுக்கி விட்டனர். இதுபோல் எனக்கும் பணிகள் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டிய தர்ஷன் தீட்சிதர். இது குறித்து தீட்சிதர்களிடம் கேட்டபோது நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தால்தான் பணி கிடைக்கும் என கூறுகின்றனர். இதனால் தனக்கு வாழ்வாதாரம் இல்லை. எனவே இதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக கூறினார்.