இரு தரப்பு உறவு பற்றி விவாதிக்க பாகிஸ்தான் செல்லவில்லை: ஜெய்சங்கர்!
டெல்லியில் நடைபெற்ற சர்தார் படேல் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாத மத்தியில் நான் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளேன். எனது பயணம் இந்தியா – பாகிஸ்தான் உறவுகளைப் பற்றியது அல்ல. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொறுப்பான உறுப்பினராக இருப்பது மட்டுமே. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் காரணமாக நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இது பலதரப்பு நிகழ்வு. நான் எஸ்சிஓவில் நல்ல உறுப்பினராக இருப்பேன், அதற்கேற்ப கண்ணியமான நபராக நடந்து கொள்வேன்.
இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் எஸ்சிஓவில் உறுப்பினராக உள்ளது. அதனால்தான், இந்த முறை உச்சிமாநாடு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. ஆனால் அது எனது பயணத்தின் தன்மையை மாற்றாது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கு மட்டுமல்லாது, எதிர்பாராதவிதமாக என்ன நடக்கும் என்பதற்கும் திட்டமிடுவது முக்கியம். அந்த வகையில், இந்த பயணத்துக்கான எனது திட்டமிடல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் குறித்து நேற்று (அக். 04) செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) ‘அரசாங்கத் தலைவர்கள்’ (Heads of Government) மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்ல உள்ள இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமை தாங்குவார்” என தெரிவித்தார்.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். 2016, ஆகஸ்ட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றார். அதன் பிறகு, எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக 2015 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார்.
2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா ரத்து செய்தது. விதிவிலக்காக, கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு மட்டும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா இரண்டு மத்திய அமைச்சர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.