புரட்சியாளர் அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே அரசமைப்பின் ஆன்மாவை தகர்ப்பதா?: திருமாவளவன்!

 
1

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர், எதிர்கால இந்தியா குறித்து வெளியிட்ட கவலைகளை திருமாவளவன் பட்டியலிட்ட போது அவரது மைக் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மைக் இல்லாமலேயே திருமாவளவன் பேசினார். லோக்சபாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:-

அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறோம். இதனைக் கொண்டாடும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கரை இந்த சபை போற்றிக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் 3 ஆண்டுகாலம் அல்லும் பகலும் அயராது உழைத்து ஒரு புதிய இந்தியாவை சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்பதற்காக இந்த நாட்டுக்கு அருட்கொடையாக வழங்கியதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம். இது சட்டம் மட்டுமல்ல.. புதிய இந்தியாவை கட்டமைக்கிற கோட்பாடும் ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரை இதனை விளக்குகிறது. நாம் எத்தகைய இந்தியாவை எதிர்காலத்தில் கட்டமைக்கப் போகிறோம் என்பதை அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

சோசலிசம், செக்குலரிசம், பன்முகத்தன்மை, கூட்டாட்சி ஆகிய இந்த 4-ம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகள். அவை அட்டுமின்றி நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய 4-ம் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தூண்களாகும். இவற்றை பாதுகாப்பதுதான் இன்றைய சவாலாக இருக்கிறது.

அம்பேத்கரின் பெருமைகளை இங்கு பேசுகிற போது, அவரை எதிர்த்தது- அவருக்கு துரோகம் செய்தது என சுட்டிக்காட்டியது நீயா? நானா? என்கிற வகையில்தான் இருந்தது. 75 ஆண்டுகாலத்தில் எந்த அளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்; வெற்றிகரமாக அவற்றை நடைமுறைப்படுத்தி புதிய இந்தியாவை கட்டி எழுப்பி இருக்கிறோம் என்பது குறித்து இங்கே உரையாடல் இல்லை என்பது வேதனை தருகிறது.

அம்பேத்கர் இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்கப்படுவதற்கு முதல்நாள், 1949-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி அரசியல் நிர்ணயசபையில் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 3 ஆண்டுகாலம் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியலமைப்புச் சட்டம் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். 1950 ஜனவரி 26-ந் தேதி இந்த தேசம் குடியரசாகிவிடும்; அது மகிழ்ச்சி அளிக்கிறது; ஆனால் இந்த தேசத்தின் எதிர்காலத்தை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்; அரசியல் ஜனநாயகத்தை வென்றெடுத்துவிட்டோம்; ஆனால் சமூக ஜனநாயகம்; பொருளாதார ஜனநாயக கேள்விக்குறியாக நிற்கிறது என்றார் அம்பேத்கர். இவற்றை எல்லாம் நாம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என கவலையை வெளியிட்டவர் அம்பேத்கர்.

சுதந்திரம் இல்லாமல் சமத்துவம், சகோதரத்துவம் இங்கே நடைமுறைக்கு வராது; சமத்துவம் இல்லாமல் சுதந்திரம், சகோதரத்துவம் இங்கே வெற்றி பெறாது- ஆகவே ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரிக்க முடியாது; இந்த மூன்றும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் போதுதான் இங்கே சமூக ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்கிற கவலையை பதிவு செய்தவர் அம்பேத்கர். இதற்கு தடைகளாக இருப்பவற்றைத் தூக்கி எறிய வேண்டும் என்று சொன்னவர் அம்பேத்கர். இது தேசமாகவே இன்னமும் வடிவம் பெறவில்லை என்றார் அம்பேத்கர்.

எதிர்காலத்தில் வர இருப்பவர்கள் நாட்டை விட மத நம்பிக்கைகள் மேலானதா? மதநம்பிக்கைகளை விட நாடு மேலானதா? என்ற கேள்விக்கு யார் விடைசொல்லப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியவர் அம்பேத்கர். ஒருவேளை நாட்டை விட மத நம்பிக்கைகள் மேலானது என நம்பினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்றார் அம்பேத்கர். இந்த தேசத்தின் சுதந்திரத்தை மீண்டும் வென்றெடுக்க முடியாத நிலை உருவாகும் என்றார் அம்பேத்கர். 75 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அம்பேத்கரால் தீர்க்கதரிசனமாக உணர முடிந்திருக்கிறது.. மதநம்பிக்கை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டால்.. என பேசியபோது திருமாவளவனின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டு மற்றொரு எம்பி பேச அழைக்கப்பட்டார். ஆனாலும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். சிறிது நேரம் மைக் இல்லாமலேயே உரத்த குரலில் தாம் சொல்ல வந்த கருத்துகளை முன்வைத்தார் திருமாவளவன்.