"Dear Dhoni we want you to lead CSK for many more season."- ஸ்டாலின் கோரிக்கை

 
mkstalin

துபாயில் நடைபெற்ற 14 வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேப்டன் தோனி வெற்றிக்கோப்பையை சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “சென்னை என்றாலே சூப்பர் தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து நாட்களாக வெள்ள பாதிப்புதான் என் மனதிலும், சிந்தனையிலும் ஓடுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்றது சற்று இளைப்பாறலாக உள்ளது. எனக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு, மேயராக இருந்த போது கபில்தேவுடன் சேப்பாக்கத்தில் விளையாடி உள்ளேன். தோனியின் சொந்த மாநிலம் ராஞ்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்காரராக மாறிவிட்டார். தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக தோனி உள்ளார் 

தோனியும் தலைவர் கலைஞரை போலவே கூல் ஆனவர். நெருக்கடியின் போதெல்லாம்  இருவரும் கூலாகவே இருப்பார்கள். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை மறக்கவே முடியாது. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றாலே தோனி தான். சிறிய ஊரில் இருந்து கடின உழைப்பால் உச்சத்தை தொட்டவர் தோனி. ஒரு அணியை வழிநடத்துவது சவாலான ஒன்று. சீனியர் முதல் இளம் வீரர்களை ஒருங்கிணைத்து தோனி ஈட்டியிருக்கும் வெற்றி ஆளுமைக்கான சான்று. இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்தமுடியாது, இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும்.

அபார வெற்றியுடன் மீண்டு எழுந்திருக்கும் சென்னை அணியை வாழ்த்தி வணங்குகிறேன். நீங்கள் விளையாட்டை தொடருங்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். நீங்கள் இன்னும் பல போட்டிகளுக்கு சென்னை அணியை வழிநடத்த வேண்டும்” எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.