மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை- கைதுக்கு பயந்து மாமியாரும் தற்கொலை
கன்னியாகுமரியில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்டார். கைதுக்குப் பயந்து தற்கொலைக்கு முயன்ற மாமியாரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கோயில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு (56).இவருக்கு சுருதிபாபு (24) என்ற மகளும் விஷால் என்ற மகனும் உள்ளார்கள். இந்நிலையில் தனது மகள் சுருதிபாபுவை குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தெற்கு மண் பகுதியை சேர்ந்த நாகராஜன் - செண்பகவல்லி தம்பதியரின் மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு (21-4-24) திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் திருமணம் முடிந்து பல கனவுகளுடன் தனது கணவர் வீட்டில் வாழ வந்த சுருதிபாபுவை அவரது மாமியார் மனரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது பிற்போக்கு எண்ணத்துடனும் தனது மகன் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற அதீத பாசத்தாலும், மேலும் குறுகிய மனப்பான்மையில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பின்னரே சுருதிபாபு உணவு சாப்பிட வேண்டும் என்றும், தனது மகனுடன் சுருதிபாபு வெளி இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்லவும் மறுப்பு தெரிவித்தாகவும், தனது மகனுடன் வீட்டில் சுருதிபாபுவை ஒன்றாக இருக்க கூட விடவில்லை என தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சுருதிபாபு, இது குறித்து தனது தாயாருக்கு வாட்ஸ்ஆப் கால் மூலமாக தனது வேதனையை தனது பெற்றோருக்கு (21-10-24) தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுருதிபாபுவின் பெற்றோர் கோவையில் இருந்து மகளை பார்த்து சமாதானப்படுத்துவதற்காக சுருதிபாபுவின் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த நிலையில், சுருதிபாபுவின் தந்தைக்கு உங்கள் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டார் என கார்த்திக்கின் சகோதரி தொலைப்பேசி மூலமாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுருதிபாபுவின் தந்தை தனது மகளின் வீட்டிற்கு வந்த பொழுது உங்கள் மகள் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என சுருதிபாபுவின் கணவர் வீட்டார் தெரிவித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மாமியார் கொடுமைபடுத்தியுள்ளதாகவும் கூறி சுசீந்திரம் காவல் நிலையத்தில் சுருதிபாபுவின் புகார் அளித்தார். இதனை அடுத்து புகாரின் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸார் இளம் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். மேலும் திருமணம் நடந்து சில மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணையும் நடைப்பெற்றது. இந்த விசாரணை முடிவில் மருமகளை கொடுமைப்படுத்தியதாக தான் கைது செய்யப்படலாம் என அச்சம் அடைந்த மாமியார் செண்பகவல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து மாமியாரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மாமியார் செண்பவல்லி உயிரிழந்தார்.
குடும்பத்தை சரியாக நிர்வகிக்க தெரியாத இளைஞர் கார்த்திக், ஒரே வாரத்தில் தாய், மணைவி என இரண்டு பேரையும் பறிகொடுத்து தன் குடும்ப வாழ்கையை இழந்து தனியாக நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாமியார்,மருமகள் தற்கொலைகள் குறித்து சுசீந்திரம் போலிஸார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.