சேதமடைந்த மழைநீர் கால்வாய்கள்.. மாற்று ஏற்பாடு என்ன? - மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பித்த மெட்ரோ நிர்வாகம்..

 
metro

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கான மாற்று ஏற்பாடு பணிகளின் நிலை குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 25 இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் காரணமாக, மழை நீர் வடிகால் கட்டமைப்பு சேதம், மழை நீர் வெளியேறும் கால்வாய்கள் மூடப்பட்டது போன்ற பிரச்சினைகள் கண்டறியப்பட்டன. பருவமழை தொடங்கும் முன் இவற்றை சீர் செய்யாவிட்டால் தொடர் மழை பெய்யும் பொது சென்னையில் பல முக்கிய பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கும் அபாயம் இருந்தது. 

chennai corporation

இந்நிலையில் இவற்றை குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி தொழிநுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று எற்பாடு செய்ய பரிந்துரை வழங்கியது. இவை அனைத்து பணிகளையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஒக்கியம்மடுகு கால்வாய் நீர்வழி பாதை சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது.

மில்லர் ரோடு புரசைவாக்கம் சந்திப்பு, பார்னாபி சாலை ஈவெரா சாலை சந்திப்பு, வில்லிவாக்கம் பேருந்து நிலையம், திருமங்கலம் 100அடி சாலை, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, அயனாவரம் ஆண்டர்சன் சாலை, மந்தைவெளி, மாதவரம், ஆர்காட் சாலை போரூர் சந்திப்பு உள்ளிட்ட 18 இடங்களில் மழை நீர் வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைதல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகர்ட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.