“அடிக்கடி பழுதாகி பாதி வழியிலேயே நிற்கிறது”- ஓலா நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை
பொள்ளாச்சியில் உள்ள ஓலா மின்சார இரு சக்கர வாகன ஷோரூம் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி - உடுமலை சாலையில் அமைந்துள்ளது ஓலா ஷோரூம் .இங்கு ஓலா கம்பெனியின், இ- பைக்குகள் எனப்படும் மின்சார இருசக்கர விற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 49, 999 ரூபாய் முதல் ஒரு லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள இரு சக்கரம் மின்சார வாகனங்கள் விற்கப்படுகின்றன. பொள்ளாச்சி பகுதியை சுற்றி உள்ள பெரும்பாலான மக்கள் இங்கு விற்கப்படும் மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஓலா மின்சார பைக்குகள் தொடர்ந்து பழுதடைந்து வருவதாகவும், புதிதாக வாங்கிய ஓலா மின்சார இருசக்கர வாகனங்களும் வாங்கிய முதல் வாரத்திலேயே அடிக்கடி பழுதாவதாகவும், பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய உரிய சர்வீஸ் சென்டர் இல்லை எனவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து ஓலா ஷோரூம் அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதில் தரவில்லை என கூறப்படுகிறது.
ஓலா மின்சார இரு சக்கர வாகனங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் புகார்களை தெரிவித்து வந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ஓலா ஷோரூம் மின்சார இரு சக்கர வாகனங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து இன்று ஓலா இருசக்கர மின்சார வாகனங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள ஓலா ஷோரூம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழுதடைந்த வாகனங்களை ஓலா திரும்பப் பெற வேண்டும் எனவும், அதற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஓலா மின்சார இரு சக்கர வாகனங்களை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.