புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி- பாஜக தலைமையிடம் எம்எல்ஏக்கள் புகார்

 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி மீது தேசிய தலைவர் நட்டாவிடம் புதுச்சேரி பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். 

புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ்- பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணியின் தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். இதில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத்தலைவர்கள் பதவி கோரினர். பின்னர் தங்களுக்கு அமைச்சர் பதவியும் கேட்டு வந்தனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்,  வெங்கடேசன், ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லிக்கு  சென்றுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலை முதலில் சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பாஜக தேசியத்தலைவர் நட்டாவை இன்று சந்தித்து பேசினர். இதுபற்றி பாஜக எம்எல்ஏக்களிடம் பேசுகையில், தேசியஜனநாயகக்கூட்டணித்தலைவரான முதல்வர் ரங்கசாமி, எம்எல்ஏக்கள் கூட்டமே 3 ஆண்டுகளாக நடத்தவில்லை. பட்ஜெட் தாக்கலாகும் முன்பு கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை அழைத்து இம்முறையும் பேசவில்லை. வளர்ச்சி திட்டங்களை தெரிவித்தாலும் புறக்கணிக்கிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் தரப்பில் எழும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

Image

வரும் சட்டப்பேரவைத்தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்தால்தான் நல்லது என தெரிவித்தோம். இது தொடர்பாக கலந்து பேசி தகவல் தெரிவிப்பதாகவும், ஏற்கெனவே ஐபி ரிப்போர்ட் வந்துள்ளதாகவும் நட்டா தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.