செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 2ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி புதிதாக இரன்டு மனுக்கள் தாக்கல் செய்யபட்டன. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாகத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், குற்றச்சாட்டு பதிவை 15 நாட்கள் தள்ளிவைக்க கோரி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஒரு வழக்கை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்தால் கீழமை நீதிமன்றம் அதற்கான போதிய நேரத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தொடங்கிவிட்டால் அனைத்தும் செல்லாதாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமலாகத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளதாக கூறும் வழக்கு இதுவரை எண்ணிடப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதுபோன்று தொடர்ந்து நேரம் கேட்பதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.