மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும்: செல்லூர் ராஜூ!

 
1

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களுடன் இணைந்து ஆணையர் தினேஷ்குமாரை சந்தித்தார். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மதுரை மாநகராட்சி ஆணையர் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். மக்கள் பிரதிநிதிகளுக்கு மரியாதை கொடுக்கிறார். மதுரையில் அம்ருத் குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, புயல் வேகத்தில் நடைபெற்ற பணிகள் தற்போது மிகவும் தொய்வாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதேபோல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சாக்கடை நீர் கலக்கும் பிரச்னையும் அதிகமாக உள்ளது. மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடிக்க சொன்னோம். இந்தப் பிரச்னைகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்று ஆணையர் உறுதி கூறியுள்ளார்.

இது ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யாரும் மறுக்க முடியாது. நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்கும்போது, உரிய அனுமதி கொடுக்க வேண்டியது அரசின், கடமை. அனைத்து நடிகர்களின் படங்களுக்கும், ஒரே மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டும். ஆளும் திமுக அரசு முழுக்க முழுக்க அராஜக போக்குடன், கண்மூடித்தனமாக செயல்படுகின்றது. முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். நான் அமெரிக்காவில் இருந்தாலும் தமிழகத்தை கவனிப்பேன் என முதலமைச்சர் கூறியிருந்தார். அப்படி சொன்னவர் இதை ஏன் கேட்காமல் இருக்கிறார். ரசிகர்களை மட்டுமே வைத்து நாட்டை ஆள முடியாது என்று கூறியிருந்தேன். ரசிகர்களுடன், மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும். அது விஜய் மட்டுமல்ல. எந்த நடிகராக இருந்தாலும் அதுதான் அளவுகோல். எம்ஜிஆருக்கு ரசிகர்களுடன் பொதுமக்கள் ஆதரவு இருந்தது. விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பதை காலம் தான் சொல்லும்.

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துவதற்காக அமெரிக்கா சென்றார், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று விதவிதமாக சைக்கிள், பைக், கார் ஓட்டுகிறார். ஜிம்முக்கு போகிறார். அவர் ஜாலி டிரிப் போனது போல எல்லா இடங்களுக்கும ஜாலியாக போகிறார். யாரைப் பற்றியும் கவலை இல்லை. அவர் வசம் உள்ள காவல்துறையில், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேங்கைவயல் பிரச்னை இன்னும் முடியவில்லை. அதற்குள் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு உணவுக் கூடத்தில் மனித கழிவை கலந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உதயநிதி ஏதோ முதலமைச்சர் என்ற மனநிலையில் மதுரை வருகிறார். நாங்கள் கேட்ட எந்த கோரிக்கையும் இந்த அரசால் நிறைவேற்றப்படவில்லை.

திமுக ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு எதுவும் செய்யவில்லை. மதுரை மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் சிறப்பு நிதியாக ரூ.250 கோடி ஒதுக்கினர். இந்த அரசு மதுரையை பாராமுகமாக பார்க்கிறது. மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அடிப்படை பணிகளை நிறைவேற்ற முடியும். கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கட்சிக்காரர்களை அழைத்து வந்து மாநகராட்சியில் கூட்டம் நடத்துகிறார். இதையே நாங்கள் செய்தால் என்னாகும். கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே திமுகவாக உருமாறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.