விவசாய நிலத்தில் கள்ளச்சாராய ஊறல்! அதிரடி காட்டிய போலீஸ்

 
ஆ

திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் ஊராட்சி மிட்டகண்டிகை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 4 சாராய ஊறல் புதைத்து வைத்து இருப்பதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள்  தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் மிட்ட கண்டிகை பகுதியில் சோதனை செய்தனர்.

கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மிட்டகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரகுராம் (வயது 55) என்பவரின் விவசாய நிலத்திற்கு அருகே பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ரகுராம் மற்றும் அவருக்கு துணையாக இருந்ததாக கூறி மிட்ட கண்டிகை  இருளர் காலனியை சேர்ந்த ரவி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து காவல்  நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் ஊறல் பதுக்கி வைத்திருந்த இடம்  ரகுராமுக்கு சொந்தமில்லை எனக்கூறி மதுவிலக்கு போலீசார்  அவரை விடுவித்தனர். ஆனால் ரவியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். விறகு வெட்ட சென்ற ரவியை போலீசார் சாராயம் காய்ச்சுவதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி பொய் வழக்கில் கைது செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட ரவியின் மனைவி எல்லம்மாள் தெரிவித்ததாவது:- தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. நாங்கள் அனைவரும் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆந்திரப் பகுதியில் உள்ள வி.ஆர்.புரம் கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடித்தி வருகிறோம் . ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் தமிழக எல்லைப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி பொது மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விறகு வெட்டு சென்ற எனது கணவர் ரவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது கணவர் கைது செய்யப்பட்ட விவரம் நள்ளிரவு தான் தெரியும். மேலும் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஞான அருள்மணி எங்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று  பீரோவில் வைத்திருந்த எனது கணவரின்  ஆதார் கார்டு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளார். சோற்றுக்கு கூட வழியில்லாத எங்கள் குடும்பம்  எனது கணவரை நம்பியே இருந்தது. தற்போது போலீசார் எனது கணவரை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர், அவரை வெளியே எடுப்பதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. தமிழக அரசும், வடக்கு மண்டல ஐஜிம் எனது கணவர் கைது குறித்து உரிய விசாரணை நடத்தி பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மானாமதுரை அருகே 300 லிட்டா் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

தமிழக ஆந்திர எல்லையில் நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, சிவாடா, நெமிலி, பூனிமாங்காடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் இருந்து இந்த கிராமங்கள் வழியாக தமிழகத்திற்கு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது. மேலும் மணல் கடத்தல் மற்றும் வழிப்பறி சம்பவம் அதிகரித்து வருகிறது.  போலீசார் இது போன்ற குற்ற செயல் ஈடுபடும் நபர்களை கைது செய்யாமல் ஒன்றும் தெரியாத பழங்குடியின மக்களை கைது செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.