அண்ணாமலை நேற்று முளைத்த காளான்: செல்வப்பெருந்தகை
அண்ணாமலை நேற்று முளைத்த காளான் என தமிழ்நாடு காங். கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவரும், முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை. சத்யமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் ஃ வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “மகாராஷ்டிராவில் மோடி அரசால் பல கோடி மதிப்பில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 6 மாதங்கள் கூட தாக்குபிடிக்கவில்லை. உடைந்து நொறுங்கிவிட்டது. இதுதான் மோடி அரசின் நிலை. ஆனால் கன்னியாகுமரியில் வானுயர நிற்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை சுனாமியே வந்தாலும் உறுதியாக நிற்கும். தமிழ்நாட்டில் இப்படி எத்தனையோ சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று முளைத்த காளான் அண்ணாமலை, இந்திராகாந்தி குறித்து விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை. முதலில் அண்ணாமலை வாஜ்பாய் குறித்து படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்டோரை வாஜ்பாய் புகழ்ந்து பேசியுள்ளார்” என்றார்.