ரூ.500 கோடி ஊழலில் ஈடுபட்டதாக ஓபிஎஸ் மீது புகார்

 
ops

அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு  அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரும் புகாரை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Tamil Nadu: In ruling AIADMK, O Panneerselvam-led faction show signs of  dissent

தேனி மாவட்டம், உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்தாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளதாகவும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் 217 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஊழல் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதல் பெறுவதற்காக மனுதாரரின் புகார் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், அனுமதி பெற்று மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து தெரிவிப்பதற்காக வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.