கைதாகிறாரா சீமான்? ஒரே நாளில் குவிந்த புகார் மனுக்கள்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரே நாளில் சீமான் மீது திமுக உள்ளிட்ட நான்கு புகார்கள் வந்துள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பூதாகரமாக மாறியுள்ளது. இந்த நிலையில் திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் தனித்தனியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளனர். சீமான் மீது ஒரே நாளில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 4 புகார்கள் குவிந்துள்ள நிலையில், நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் சட்ட நிபுணர்களின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, சீமான் ஏற்கனவே தமிழ் தாய் வாழ்த்தை இழிவு செய்தார், அதே போல திண்டுக்கல் டி.ஐ.ஜியை இழிவாக பேசி இருக்கிறார், தற்போது பெரியாரை அவமதித்து இருக்கிறார், இந்த முறையாவது சீமான் மீது கண்டிப்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.