வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு...
சென்னையில் மீண்டும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல் மற்றும் சிலிண்டர்களுக்கு புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விலையை உயர்த்தியது. தொடர்ந்து செப்டம்பர் மாதமும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.38 அதிகரித்தது.
இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது.