கோவை மாணவி தற்கொலை - 13 பேரிடம் மாநில குழந்தை நல ஆணையம் விசாரணை

 
கோவை மாணவி தற்கொலை

கோவையில் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் சார்பில் நடைபெற்ற அமர்வு விசாரணை நிறைவடைந்த நிலையில், விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் எனவும் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவையில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது தனியார் பள்ளி மாணவியின் மரணம் குறித்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமையில், உறுப்பினர்கள் முனைவர் ராமராஜ், முனைவர் மல்லிகை, முனைவர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய நால்வர் கொண்ட அமர்வு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விசாரணை மேற்கொண்டது. 

இதில் கலந்து கொண்டு தகவல்களை அளிக்குமாறு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர், சக மாணவிகள், மாணவி பயின்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் பெற்றோர் கழகத்தினர், பள்ளி நிர்வாகிகள், காவல்துறையினர் உட்பட பலரும் நேரில் ஆஜராகியிருந்தனர். அவர்களின் 13 பேரிடம் ஆணைய அமர்வு சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி, மாணவி மரணம் குறித்து 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.