யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு - தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர்!
யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
புதிய கல்வி கொள்கை மாநில கல்வி கொள்கைக்கு எதிராக உள்ளதாக கூறி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் என கூறி வருகிறது. இருப்பினும் புதிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி பல்வேறு உத்தரவுகளை போட்டுள்ளது. அதாவது, புதிய கல்வி கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும், ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற தீர்மானத்தில் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் எனவும், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது யுஜிசி வரைவு நெறிமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.