1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. - புதுச்சேரி அரசு அறிவிப்பு..

 
புதுச்சேரி

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த  2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து மாணவர்களின் கல்வி பெருமளவில்  பாதிக்கப்பட்டது.  கடந்த 2 ஆண்டுகளாக  ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய கட்டாயத்தில், அவர்களது கல்விச் சூழலே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.  நகர்ப்புற மாணவர்களைப் போல, கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கல்வியை எளிதில் அணுக முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் பலர் கல்வியிலிருந்து விலகி,  இடை நிற்கும் சூழலும் ஏற்பட்டது.  

ஆன்லைன் தேர்வு

 கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில்  பிப்ரவரி மாதத்துக்குப் பிறகுதான் மாணவர்கள் நேரடி வகுப்புகள் மூலம் கல்வி கற்றுவருகின்றனர். ஆனால்  மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுமையாக  நடத்தி முடிக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் தேர்வுகளில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  

மாணவர்கள்

இந்தநிலையில், புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மேலும் மாணவர்களின் வருகைப் பதிவு, குறைவான கல்விக்கட்டணம் போன்றவைகளினால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், 10, 11  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது.  அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.