நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்- 4 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்

 
அச் அச்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டது. எஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து 4 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  

மத்தியபிரதேச மாநிலம் போபால் அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி முஸ்கா. நாகர்கோவில் கோட்டார் தேவாலய திருவிழாவிற்கு பலூன் விற்பனை செய்ய வந்துள்ளனர்.இந்த நிலையில் சொந்த ஊர் செல்ல நேற்று மாலை குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில்நிலையம் வந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென  முஸ்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை சாராவுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதாக கூறி குழந்தையை தூக்கி கொண்டு ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சன் உடனடியாக கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து எஸ்பிஐ ஸ்டாலின் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தையை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே குழந்தையை மர்ம ஆசாமி தூக்கிச் செல்லும் காட்சி சமூக  வலைதளங்களில் வைரலானது. குழந்தையை கடத்திச்சென்ற மர்ம நபர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கலாமா என சந்தேகம் எழுந்த நிலையில், அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் குழந்தையை நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் காட்டு பகுதியிலிருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையை கடத்திய நாகர்கோவிலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யோகேஷ் குமார் என்பவரை கைது செய்த போலீசார் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.எதற்க்காக குழந்தையை கடத்தி சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்பி ஸ்டாலின் பாராட்டினார்.