அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை நாக்பூரில் மீட்பு

 

அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை நாக்பூரில் மீட்பு

சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை புகார் அளித்த நான்கு மணி நேரத்திற்குள் நாக்பூரில் மீட்டிருக்கிறார்கள் போலீசார்.

அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை நாக்பூரில் மீட்பு

பீகார் மாநிலத்தின் அமீர் துர்காபூர் பகுதியைச் சேர்ந்த மிதிலேஷ்குமார்- துர்காதேவி தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஐந்து வயதில் மூத்த மகனும் 3 வயதில் இளைய மகனும் உள்ளனர். அம்பத்தூர் பகுதியில் இத்தம்பதிகள் வாடகைக்கு குடியிருந்து சென்னையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் குடியிருந்த வீட்டின் மேல் தளத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சிவகுமாரும், இருபத்தி ஒரு வயது இளைஞர் மோனு என்பவரும் தங்கியிருந்து சென்னையில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.

மிதிலேஷ் குமாரும் துர்க்காதேவி சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததால் அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வரும் வரைக்கும் குழந்தைகள் இருவரும் வீட்டில் தனியாகத்தான் இருந்து வந்திருக்கின்றனர். அந்த சமயங்களில் மேல்தளத்தில் குடியிருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி பிஸ்கட் கொடுத்து வாங்கி கொடுத்து வந்திருக்கின்றனர். இதில் அந்த குழந்தைகள் அந்த இளைஞர்களுடன் நன்கு பழகி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதியன்று மூன்று வயது ஷியாம் என்ற குழந்தையை இரண்டு இளைஞர்களும் பிஸ்கட் கூல்டிரிங்ஷ் வாங்கி தருவதாக வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் திரும்பி வரவே இல்லை.

மாலையில் வேலை முடிந்து வந்த நிதிஷ்குமாரும் துர்கா தேவியும் மூத்த மகன் விஷ்ணுவிடம் ஷியாம் எங்கே என்று கேட்க மேல் வீட்டில் உள்ள அங்கிள் ரெண்டு பேரையும் கூட்டிச்சென்று இருப்பதாக சொல்லியிருக்கிறான். இதையடுத்து மேல் வீட்டில் சென்று தேடிப் பார்த்தால் அங்கே இல்லை. அந்த இளைஞர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்தும் அங்கேயும் குழந்தை இல்லை. அந்த இளைஞர்களும் இல்லை.

இதனால் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் தேடிப் பார்த்தபோது குழந்தையையும் அந்த இளைஞர்களையும் பார்க்க முடியவில்லை. இதனால் மறுநாள் 19ஆம் தேதி காலை 11 .30 மணியளவில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர் . புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் தான் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களிருவரும் ஆதார் கார்டை வைத்து ரயிலில் முன் பதிவு செய்து நாக்பூருக்கு ரயிலில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நாக்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மதியம் ஒரு மணி அளவில் இரண்டு இளைஞர்களையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்த குழந்தை ஷிவாவும் மீட்கப்பட்டது. பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெகநாதன், இளங்கோ நாட்டாளமை உள்ளிட்ட காவலர்கள் விமானம் மூலம் நாக்பூர் சென்று குற்றவாளிகள் இருவரையும் கடத்தப்பட்ட குழந்தையையும் சென்னைக்கு மீட்டு வந்தனர். சென்னை வந்ததும் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு குற்றவாளிகள் இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.