ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

 
ttn

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மனிதாபிமான செயல்பாடு தமிழ்நாடு காவல் துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்து அரசு நிர்வாகத்தை சார்ந்த ஒவ்வொருவரும் ,அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல பருவமழை காலத்தில் நேரத்தில் மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ttn

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெரு மழையில் சிக்கி தவித்து முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவின்றி , கிடந்த உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு ,கோல்டன் ஹவர் எனப்படும் அந்த பொன்னான நேரத்தை சரியாக உணர்ந்து ,அவரை தோளில் சுமந்து ஓடி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரை உயிர் பிழைக்க வைத்த தங்களின் அர்ப்பணிப்பு மிக்க கடமை உணர்வும், சீருடை பணியாளர்களுக்குரிய ஈர  இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்கு உரியவை.

தடகளப் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக சாதனைகள் பல புரிந்ததுடன் , 1992 கும்பகோணம் மகா மகத்தின் போது ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் உயிருக்கு போராடியவர்களை, மீட்பதில் தாங்கள் ஆற்றிய பணி என்றாலும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். காவல் பணியில் எளிய மக்களின் துயர்துடைக்கும் கரங்களாக தங்களுடைய செயல்பாடு பலமுறை அமைந்துள்ளது.  கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில், அவர்களை சேர்ப்பது குற்றவாளிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு , சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என தங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவும், காவல்துறை உயரதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், பொதுமக்களின் வாழ்த்துக்களுக்கும், உரியவையாக அமைந்துள்ளன.

ttn

சென்னை டிபி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான திருமதி இராஜேஸ்வரி ஆகிய தங்களின் மனிதாபிமான செயல்பாடு தங்களைப்போன்ற ,மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும், பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையிலும் ,மழைக்கால பேரிடர் நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் ,தேவைகளை கேட்டு அறிந்தவன் என்ற முறையிலும், தங்களின் மனிதாபிமானமிக்க உயிர்காப்பு பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி, காவல்துறையில் உள்ள அனைவருக்கும், பெருமையும் ,ஊக்கத்தையும் அளிக்கக்கூடியதாகும் . தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.  சட்டத்தையும் ,மக்களையும், காக்கின்ற பணி தொடரட்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.