ஜன.25 வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரவலாக மழை பெய்தது. அதேபோல், அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் ஊத்து பகுதியில் 151 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 137 மி.மீ., காக்காச்சி பகுதியில் 120 மி.மீ., மாஞ்சோலையில் 106 மி.மீ. மழை பதிவானது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்ததால் இன்று 5-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மிதமான மழை பெய்தது. கருப்பாநதி அணையில் 36.50 மி.மீ., ஆய்க்குடியில் 31 மி.மீ., சங்கரன்கோவிலில் 17 மி.மீ. மழை பெய்தது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிற்றருவி, புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக புழலில் 6 செமீ மழை பதிவானது. காலை முதலே மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியாக, ரம்மியமான சூழல் நிலவியது.
தமிழகத்தில் ஜனவரி 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜன.20) தென் மாவட்டங்களில் சில இடங்கள், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்.
ஜனவரி 21, 22, 23-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 24, 25 தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.