6000 சாலைகளில் பேட்ச் ஒர்க்! இனி பள்ளமே இருக்காது- மேயர் பிரியா
சென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை உட்வார்ப்பு மற்றும் பெரியமேடு அரசு கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள நேவல் மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு அந்த பகுதி மக்களின் குறைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, “மூன்றாவது நாளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம், வீடு வீடாக சென்ற மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம், சாலைகளில் குப்பைகள் உள்ளது, சாலை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர், அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மழையால் நவம்பர் டிசம்பர் மாதத்தில் சாலை போடும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி மாதம் தொடங்கியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் சாலை போடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் முதல் 6000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டிய சூழல் உள்ளது, 3 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மீதமுள்ள பணிகளும் வரும் காலங்களில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.