மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கு...கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் உள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929-ம் ஆண்டு ‘தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து முன்னதாகவே தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கி, அவர்களை மலைப் பகுதியில் இருந்து காலி செய்யுமாறு கூறியது.
இந்த நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசின் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேயிலை தோட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பண பலன்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.