தனிநபரின் வீட்டின் முன்பாக சோதனைச்சாவடி - நீதிபதி எழுப்பிய கேள்வி

 
c

 தனிநபரின் வீட்டிற்கு முன்பாக காவல்துறையினர் சோதனை சாவடியை அமைத்திருக்கும் நிலையில் தற்போது அந்த சோதனை சாவடியை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.   இதனால் கொதித்தெழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  வழக்கு விசாரணையில் காவல்துறைக்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்

 திருநெல்வேலி ராதாபுரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் மகேந்திரன்.   இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் காவல்கிணறு விலக்கு பகுதியில் கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் காவல்துறையினரின் சோதனைச்சாவடி உள்ளது.   இந்த சோதனைச்சாவடி எங்கள் வீட்டு கட்டடத்தை ஒட்டி இருக்கிறது.  தற்போது காவல்துறையினர் இந்த சோதனைச்சாவடியை விரிவாக்கம் செய்து கட்டடமாக கட்ட முயற்சித்து வருகிறார்கள். 

ம்

 அப்படி அமைக்கப்பட்டால் எங்கள் வீடு கடைக்கு வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும்.   நெடுஞ்சாலையில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் அரசு புறம்போக்கு நிலம் நிறைய உள்ளன.   ஆனால் அங்கெல்லாம் சோதனைச்சாவடி அமைக்காமல் தனிநபரின் வீட்டின் முன்பாக அமைத்து இப்படி இடையூறு ஏற்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும்.   சோதனை சாவடியை அகற்ற உத்தரவிட வேண்டும்.

 இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அந்த பகுதியில் சோதனை சாவடி அமைப்பதற்கு ஏதுவாக வேறு இடங்கள் இருக்கும்போது தனிநபருக்கு இடையூறு செய்யும் வகையில் ஏன் சோதனைச் சாவடி அமைக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினர்.   இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.   மேலும் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து இருக்கின்றனர்.