அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டுச் சான்றிதழ் : சு. வெங்கடேசன் பெருமிதம்!!

 
mp

அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டுச் சான்றிதழ் கிடைத்துள்ளது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த வெற்றி என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும் , ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்ததை சுட்டிக்காட்டி இந்திய ஆட்சிமொழிச் சட்டங்களின் படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்கமாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபடத் தெரிவித்தோம். அனைத்துப் படிவங்களும் தமிழில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

ttn

அதனையடுத்து சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்த போது அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என உறுதியளித்தார்.

su venkatesan

அதனடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களுக்கும் தமிழ் படிவங்கள் விரைந்து அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது பல அஞ்சலகங்களுக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டு கிடைத்துள்ளன. அதனை பலரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.தற்போது அடுத்தக்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு துறைரீதியாக வழங்கப்படுகிற பாராட்டுச் சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அஞ்சல்துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழ் முதன்மை மொழியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த அடுத்தகட்ட வெற்றி! " என்று குறிப்பிட்டுள்ளார்.