பீப் பிரியாணி கடைக்காரரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

 
ச்

கோவையில் மாட்டுகறி பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது துடியலூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

கோவை உடையாம்பாளையம் பகுதியில் சாலையோர மாட்டுக்கறி பிரியாணி கடை வைத்திருந்த ஆபிதா மற்றும் ரவி தம்பதியை, அதே பகுதியை சேர்ந்த பாஜக ஓ.பி.சி அணி மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, கடையை அகற்ற வேண்டும் என்பது ஊர் கட்டுப்பாடு என கூறி மிரட்டல் விடுத்தார். இந்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்வேறு அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 


இதனிடையே பாதிக்கப்பட்ட ஆபிதா , ரவி தம்பதியினரும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரை நேரில் சந்தித்து மனு அளித்து, உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கடை நடத்தக்கூடாது எனக்கூறிய பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாட்டுக்கறி பிரியாணிக்கடை உரிமையாளரை மிரட்டிய பாஜக ஒ.பி.சி அணி மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது துடியலூர் போலீஸார் 126(2), 192, 196, 351/2 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.