மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி - 5000 பேர் மீது வழக்குப்பதிவு!
மதுரை மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பகுதியில் இருந்து மதுரை தல்லாகுளம் வரை விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று மதுரை நகரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடைபயணமாக கிளம்ப முயன்ற நிலையில் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். காவல்துறை அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாக ஆயிரக்கணக்கானவர்கள் நடைபயணமாக கிளம்பினர். மாங்குளம் பிரிவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
இந்த நிலையில், மதுரை மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.