விசிக தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொலிக் கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். திருமாவளவனின் அந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பெண்களைத் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக, இந்து அமைப்புகள் கண்டனப் போராட்டம் நடத்தின. காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. திருமாவளவன் மீது வழக்கும் தொடரப்பட்டது. சர்வதேச கருத்தரங்கில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாகவும், அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி, திருமாவளவனுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனுஸ்மிருதி புத்தகத்தில் இருந்ததையே தான் பேசியதாகவும், மனுஸ்மிருதியில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தே பேசியதாகவும், உள்நோக்கத்துடன் எந்த ஒரு வார்த்தையையும் தாமாக தெரிவிக்கவில்லை என்றும் திருமாவளவன் ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்திருந்தார். இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.