சீமான் மீது தொடர்ந்த வழக்கு- திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு விசாரணை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நீதிபதி பாலாஜி முன்பு நேரில் ஆஜராகிய வருண்குமார் இந்த வழக்கு குறித்து தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதற்கிடையே வருண்குமாருக்கு டிஐஜி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர் திருச்சி சரக டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது . வழக்கு விசாரணைக்காக வருண் குமார் நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தந்தார். வருண் குமார் சார்பில் இருவர் சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்கள் தங்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் பொழுது சீமான், மீண்டும் மீண்டும் டிஐஜி வருண் குமார் குறித்து தர குறைவாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளோம், அவர் மீண்டும் மீண்டும் டிஐஜி வருண் குமார் குறித்து தரக்குறைவாக பேசுவதை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லாத பொழுதும் ஒரு புகார் தாரராக அவர் அனைத்து வழக்கு விசாரணையின் போதும் நேரில் வருவதாக தெரிவித்து அதன் அடிப்படையில் இன்று அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் என தெரிவித்தார்.